A/L 2001 MCQ – வினா 31 - விடையும் விளக்கமும்

உருக்குச் சவர அலகு ஒன்று நீரின் மேற்பரப்பில் தங்குமாறு செய்யப்படலாம். இது தொடர்பாகப் பின்வரும் கூறுகளைக் கருதுக.
  1. (A) உருக்குச் சவர அலகு மீது மேலுதைப்புத் தாக்காமையால், உருக்குச் சவர அலகு நீரின் மேற்பரப்பில் தங்கியிருத்தல் ஆக்கிமிடீசின் கோட்பாட்டுக்கு முரணானதாகும்.
  2. (B) நீரின் பரப்பிழுவை காரணமாகத் தாக்கும் விசைகளின் மூலம் உருக்குச் சவர அலகு நீரின் மேற்பரப்பில் வைத்திருக்கப்படுகின்றது.
  3. (C) சவர்க்காரம் நீரின் பரப்பிழுவையைக் குறைக்கின்றமையால், சவர்க்காரத்தை நீருடன் கலப்பதன் மூலம் உருக்குச் சவர அலகை அமிழச் செய்யலாம்.
  4. மேலேயுள்ள கூற்றுக்களில்,

  1. (1) (A) மாத்திரம் உண்மையானது
  2. (2) (B) மாத்திரம் உண்மையானது
  3. (3) (C) மாத்திரம் உண்மையானது
  4. (4) (A), (B) ஆகியன மாத்திரம் உண்மையானவை
  5. (5) (B), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
சரியான விடை: (5)

விளக்கம்
எந்த ஒரு பொருளும் நீரில் (திரவத்தில்) பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அமிழும் போது, அப்பொருள் அமிழும் கனவளவிற்கு சமனான நீரை (திரவத்தை) இடம்பெயர்ப்பதால், அப்பொருள் மீது மேலுதைப்பு தாக்கும்.

உருக்குச் சவர அலகு மிக மெல்லியது என்பதால், நீரில் மிதக்கச் செய்யும் போது, அது அமிழும் கனவளவு மிகச் சிறிதாகும். ஆகவே, சிறிய மேலுதைப்பு தொழிற்படும். மேலுதைப்பு தாக்காது எனும் கூற்று பிழையானது.

உருக்குச் சவர அலகு நீரில் மிதக்கச் செய்யப்படும் போது, சவர அலகின் விளிம்பு வழியே நீரின் மேற்பரப்பிழுவை காரணமாக ஒரு விசை தொழிற்படும். உருக்குச் சவர அலகு - நீர் இடையிலான தொடுகைக் கோணம் 90° இலும் அதிகமானதென்பதால், உருக்குச் சவர அலகில் தொழிற்படும் பரப்பிழுவை விசை மேல் நோக்கி இருக்கும். இவ்விசையே, உருக்குச் சவர அலகு நீரில் மிதப்பதற்கு முக்கிய காரணமாகும்.

மேற்கூறப்பட்ட பரப்பிழுவை விசையுடன், மேலுதைப்பும் சேர்ந்து மேல் நோக்கி தாக்கும். இது, உருக்கு சவர அலகின் கீழ் நோக்கிய நிறையிலும் அதிகமாக இருந்தால், உருக்குச் சவர அலகு மிதக்கும். (உருக்குச் சவர அலகு மிக மெல்லிய தகடு என்பதால், அதன் நிறை ஒப்பீட்டளவில் மிகச் சிறிது.) எனவே கூற்று (B) உண்மையானது.

நீரில் சவர்க்காரம் கலக்கப்பட்டால், நீரின் பரப்பிழுவை குறையும். இதனால், உருக்குச் சவர அலகின் மீது தாக்கும் மேல் நோக்கிய விசை குறையும். எனவே, உருக்குச் சவர அலகு சவர்க்காரம் கலந்த நீரில் மூழ்கும். கூற்று (C) உண்மையானது.

No comments:

Post a Comment