விஞ்ஞான முறையின் படிமுறைகள்

ஒழுங்குமுறையாக வடிவமைக்கப்படாத, ஒரு பரிசோதனையை / ஆய்வை மேற்கொள்ளும் போது, அந்த ஆய்வை மிகச் சிறந்த முறையில் செய்வது சாத்தியமில்லாது போகலாம். இதனால் அந்த ஆய்வின் முடிவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படலாம். ஆய்வை சிறந்த முறையில் செய்வதற்கும் நம்பகமான முடிவை பெறுவதற்கும், ஆய்வுகள் ஒரு சரியான முறைமையின் கீழ் செய்யப்படல் வேண்டும். இதனையே நாம் விஞ்ஞான முறை என்கிறோம்.

விஞ்ஞான முறையின் படிமுறைகள்

  • அவதானம்
  • கருதுகோள்
  • பரிசோதனை
  • கொள்கை அல்லது விதி
  • எதிர்வு கூறல்

அவதானம்

ஆய்விற்கு தேவையான தகவல்களை திரட்டுவதற்காக கவனமாக அவதானிப்புகளை மேற்கொள்ளலே விஞ்ஞான முறையின் முதற் படிமுறை ஆகும். எளிய அவதானங்களின் ஊடாகவோ அல்லது ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வு / ஆய்வுகளின் முடிவுகளில் இருந்தோ தகவல்கள் சேகரிக்கப்படலாம்.

உதாரணம்: 
நீங்கள் எழுதும் போது, உங்கள் பேனாவில் மையின் அளவு குறைகிறது.

கருதுகோள்

அவதானங்களின் ஊடாகவோ, ஆய்வுகளின் முடிவுகளில் இருந்தோ பெறப்பட்ட தகவல்களை பகுப்பாய்வதன் மூலம் கருதுகோள் ஒன்று உருவாக்கப்படும். தர்க்க ரீதியானதும் அனுபவ ரீதியானதுமான விளைவுகளைச் சோதிப்பதற்காக உருவாக்கப்பட்ட எடுகோளானது கருதுகோள் எனப்படும். கருதுகோளை சோதிப்பதன் மூலம் உறுதிப்படுத்தலாம். கருதுகோளை பரிசீலிப்பது பரிசோதனை எனப்படும்.

உதாரணம்: 
"ஒரு பேனாவால் எழுதினால், அந்தப் பேனாவில் மை குறையும்".

இது எமது அவதானத்தினால் உருவாக்கப்பட்ட எடுகோள். இதனை பரிசோதித்து பார்க்க இருப்பதால் இதனை கருதுகோள் எனலாம்.

பரிசோதனை

ஏதாவது ஒரு விடயத்தை சோதிப்பதற்கோ, கண்டுபிடிக்கவோ அல்லது செய்து காட்டுவதற்கோ மேற்கொள்ளப்படும் கட்டுப்பாட்டிலமைந்த செயன்முறையே பரிசோதனை எனப்படும். அதாவது, கருதுகோளை உறுதிப்படுத்தும் பொருட்டு மேற்கொள்ளப்படுவதே பரிசோதனை ஆகும்.

பரிசோதனை முடிவுகள் கருதுகோளின் பொருத்தப்பாட்டிற்கு சரியாக அமையாவிடின் பரிசோதனைச் செயன்முறைகள் சரிபார்க்கப்படல் வேண்டும். பரிசோதனைச் செயன்முறைகள் மாற்றி அமைக்கப்பட்டும் முடிவுகள் முரண்பாடாக அமைந்தால், ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட கருதுகோளானது திருத்தப்படல் வேண்டும். திருத்தப்பட்ட கருதுகோளை சோதிக்க, மீண்டும் ஒரு பரிசோதனை வடிவமைக்கப்படல் வேண்டும்.

உதாரணம்:
ஒரேமாதிரியான இரண்டு புதிய பேனாக்களை வாங்கிக்கொள்ளுங்கள். அவற்றிக்கு A, B என பெயரிட்டு அவற்றில் இருக்கும் மையின் உயரத்தை தனித்தனியே அளந்து குறித்துக்கொள்ளுங்கள். பேனா "B" யை பாவிக்காமல் அப்படியே வைத்துக்கொண்டு, பேனா "A" யை எழுதுவதற்கு பயன்படுத்துங்கள். ஓரளவுக்கு எழுதிய பின்னர், இரண்டு பேனாக்களிலும் தற்போது இருக்கும் மையின் உயரத்தை தனித்தனியே அளந்து, முன்னைய அளவீடுகளுடன் ஒப்பிடவும். 

பெற்ற அளவீடுகளில் இருந்து, பேனா "A" இல் மையின் அளவு குறைந்திருப்பதையும், பேனா "B" இல் மையின் அளவு மாறாதிருப்பதையும் அறிந்துகொள்ளலாம்.

இந்த பரிசோதனை முடிவானது, "ஒரு பேனாவால் எழுதினால், அந்தப் பேனாவில் மை குறையும்." எனும் எமது கருதுகோளை உறுதிப்படுத்துகின்றது.

கொள்கை

பரிசோதனை முடிவுகள் கருதுகோளை உறுதிபடுத்துமாயின் கருதுகோளானது இயற்கையின் குறித்த அம்சம் தொடர்பான புதிய கொள்கையாக மாறுகிறது. அவதானிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவமானது கொள்கை எனப்படும்.

உதாரணம்:
பரிசோதனை முடிவுகள் உறுதிப்படுத்துவதால், "ஒரு பேனாவால் எழுதினால், அந்தப் பேனாவில் மை குறையும்." என்பது ஒரு கொள்கை ஆகும்.

எதிர்வுகூறல்

புதிதாக உருவாக்கப்பட்ட கொள்கையை கவனமாக ஆராய்ந்த பின்னர், இயற்கையின் அறியாததொரு அம்சம் பற்றிய எதிர்வுகூறலை முன்வைக்கலாம்.

உதாரணம்:
"ஒரு பேனாவால் எழுதினால், அந்தப் பேனாவில் மை குறையும்." எனும் கொள்கையை பயன்படுத்தி செய்யப்பட்ட சில எதிர்வுகூறல்கள்:
  1. ஒரு பேனாவினால் எழுதினால் அந்தப் பேனாவில் மட்டுமே மை குறையும். வேறு பேனாவில் மை குறையாது.
  2. ஒரு பேனாவை எழுதுவதற்கு பாவிக்காமல் வைத்திருந்தால், அதில் மையின் அளவு குறையாது.
  3. வேறு இன பேனாவை பயன்படுத்தினால் கூட, அந்த குறிப்பிட்ட பேனாவில் மையின் அளவு குறையும்.
  4. வேறு நிற மையை கொண்ட பேனாவை எழுதுவதற்கு பாவித்தால், அக் குறித்த பேனாவில் மையின் அளவு குறையும்.

குறிப்பு: விஞ்ஞான முறையின் படிமுறைகள், ஒரு ஆய்வை திறம்பட செய்வதற்கு உதவுகின்றன. இருந்தாலும், செய்யப்பட்ட ஆய்வானது முறையாக ஆவணப்படுத்தப்படல் வேண்டும். எமது ஆய்வின் படிமுறைகள், முடிவுகளை எதிர்கால ஆய்வுகளில் பயன்படுத்துவதற்கு முறையான ஆவணப்படுத்தல் அவசியமாகும்.


அலகு 1 இன் ஏனைய பகுதிகளுக்கான குறிப்புகளை படிப்பதற்கு, இங்கே அழுத்தவும்.

No comments:

Post a Comment