பௌதிகவியல் அறிமுகம் - அன்றாட வாழ்க்கையில் பௌதிகவியல்

பௌதிகவியலானது சக்தி, சக்தி தொடர்பாக சடப்பொருட்களின் நடத்தை மற்றும் சக்தி இடமாற்றம் பற்றிய கற்கை ஆகும்.

பௌதிகவியலைக் கொண்டு, எமது அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களை விளக்க முடியும். பௌதிகவியல் ஆனது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டிருந்தது.

எமது பாடப்பரப்பானது 11 அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அலகுகளில் உள்ள உப அலகுகளையும் அவற்றில் அடைக்கப்பட்டுள்ள விடயங்களையும் அறிய இங்கே அழுத்துங்கள்.

வளர்ந்து வரும் பௌதிகவியல் பற்றிய அறிவானது, நவீன உலகின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. நவீன உலகில் விஞ்ஞான அறிவின் பிரயோகங்களுக்கு உதாரணங்களாக பின்வருவனவற்றை கூறலாம்.

போக்குவரத்து:

பண்டைய காலத்தில் நடந்து திரிந்த மனிதன், பின்னர் குதிரை, ஒட்டகம், யானை போன்ற விலங்குளில் சவாரி செய்தான். அதன் பின்னர், போக்குவரத்து சாதனங்களை உருவாக்கிக்கொண்டான். பல்லக்கு, இரதம் தொடக்கம் இன்றைய ராக்கெட் வரை எல்லா போக்குவரத்து சாதனங்களிலும் பௌதிகவியலின் தாக்கம் இருக்கிறது. அதாவது ஒன்று அல்லது பல பௌதீக தத்துவங்களை அடிப்படையாக வைத்தே போக்குவரத்து சாதனங்கள் உருவாக்கப்படுகின்றன.

மிக அண்மைய கண்டுபிடிப்புகளாக சூரிய சக்தியில் இயங்கும் விமானம், சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார்கள், சாரதி இல்லாமல் இயங்கக் கூடிய கார்கள் என்பவற்றை குறிப்பிடலாம். இயற்கை சக்தியை பயன்படுத்தும், சூழலுக்கு அதிகம் மாசுக்களை வெளிவிடாத வாகனங்களை உருவாக்குவதிலேயே தற்போது கூடிய கவனம் செலுத்தப்படுகிறது.


தொலைத்தொடர்பு:

முக்கிய தொலைத்தொடர்பு சாதனமாக கைத்தொலைபேசி பயன்படுவது அனைவரும் அறிந்ததே. இது தவிர, இன்டர்நெட் ஊடான தொலைத்தொடர்பும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. அதி விரைவான இன்டர்நெட் இணைப்புகளை உருவாக்குவதற்கு பல்வேறு நாடுகள் முயல்கின்றன.

ரேடியோ, டிவி போன்றன செய்திகளையும் ஏனைய நிகழ்ச்சிகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகங்களாக நீண்ட காலமாக தொழிற்படுகின்றன. ஆனாலும், தற்போது இன்டர்நெட் இன் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக இன்டர்நெட்டும் செய்திகளையும் ஏனைய நிகழ்ச்சிகள், விடயங்களை மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகமாக தொழிற்படுகிறது. உலகில் எங்கோ ஓர் மூலையில் நிகழும் நிகழ்வுகளை உடனுக்குடன் எம்மால் அறியக்கூடியதாக இருக்கிறது. அயல்வீட்டுக்காரருடனும் பிற நாட்டவருடனும் இன்டர்நெட் மூலமாக எம்மால் தொடர்புகொள்ள முடிகிறது.

மருத்துவத்துறை:

மருத்துவத்துறையில் நோய்களை கண்டுபிடிக்கவும், சில நோய்களை குணப்படுத்தவும் பௌதிகவியல் சார்ந்த அறிவும் கண்டுபிடிப்புகளும் உதவுகின்றன. இரத்தப் பரிசோதனைக்காக ஊசி மூலம் குருதியை எடுக்கும் சிறிய செயன்முறையில் இருந்து, X-Ray scan, MRI scan போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பரிசோதனைகள் வரை பௌதீகவியலின் தாக்கத்தை காணலாம்.

நவீன மருத்துவத்தில் லேசர் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட லேசர் கற்றைகளைக் கொண்டு சத்திரசிகிச்சைகள் செய்யப்படுகின்றன. சத்திரசிகிச்சைக் கத்தியின் பயன்பாடு வெகுவாக குறைந்துவருகிறது. சிறுநீரக கற்களை உடைப்பதற்கும் cancer ஐ கட்டுப்படுத்துவதற்கும் லேசர் பயன்படுகிறது.

குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிக்கு, வேறொரு மருத்துவமனை வைத்தியர், தனது வைத்தியசாலையில் இருந்தவாறே சிகிச்சை அளிக்க (சத்திரசிகிச்சை உட்பட) Tele-Medicine உதவுகிறது.

வலு, சக்தி

அன்றாட வாழ்க்கையில் நாம் பாவிக்கும் பெரும்பாலான உபகரணங்கள், மின் உபகரணங்களாகவே காணப்படுகின்றன. இவற்றிக்கு தேவையான மின் சக்தியை நாம் பல்வேறு வழிகளில் உற்பத்தி செய்கிறோம். வேறு வடிவங்களில் இருக்கும் சக்தி, மின் சக்தியாக மாற்றப்பட்டு வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

நீர்மின்சார உற்பத்தி நிலையம், அனல் மின் நிலையம், காற்றாலைகள், அணு மின் நிலையங்கள் என்பவற்றில் மின் உற்பத்தி நடைபெறுகிறது. விஞ்ஞான அறிவின் வளர்ச்சியின் பயனாக, சூரியப் படலைகள் (Solar) மூலம் சூரிய ஒளியிலிருந்து மின் உருவாக்கப்படுகிறது. சோலார் அமைப்புகளை பிரத்தியேகமாக வீடுகளிலும் பொருத்திக்கொள்ளலாம்.

சில இயந்திரங்கள் பெட்ரோலியப் பொருட்களை எரிப்பதன் மூலம், தமது இயக்கத்திற்கு தேவையான சக்தியைப் பெறுகின்றன. வாகனங்களின் என்ஜின்களை இதற்கு சிறந்த உதாரணமாக குறிப்பிடலாம். இருந்தாலும் சில சக்தி தேவைகளுக்கு மனித வலுவையும் நம்பியிருக்கவேண்டியிருக்கிறது.

புவி மற்றும் அண்டவெளி ஆய்வுகள்

ஆரம்பத்தில், விண்ணில் தெரிந்த நட்சத்திரங்களைக் கொண்டு காலங்களை கணித்த மனிதன், பின்னர் தொலைநோக்கிகளை உருவாக்கி விண்வெளியை நோக்கினான். இதன் விளைவாக பல புதிய நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் அறியப்பட்டன. தற்போது வேறு கிரகங்களில் மனிதன் வாழ முடியுமா எனும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். விண்வெளி ஆய்வுகளுக்காக பல ராக்கெட்கள், செய்மதிகள், பல்வேறு கருவிகள் மற்றும் விஞ்ஞானிகள் பல்வேறு நாடுகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆய்வுகள், தொலைத்தொடர்பு, உளவு மற்றும் ராணுவ தேவைகள் போன்றவற்றிக்காக பல செய்மதிகள் பூமியை வலம்வந்துகொண்டிருக்கின்றன.

காலநிலை மாற்றங்களை அறிந்துகொள்ளவும், இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்து, அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் பண்டைய காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அறிந்துகொள்ளவும் விளங்கிக்கொள்ளவும் பல்வேறு ஆய்வுகள் தினமும் நடைபெறுகின்றன. இவற்றைவிட வியாபார தேவைகளுக்காக, ராணுவ தேவைகளுக்காக, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்காக, சில இயற்கை நிகழ்வுகளை விளங்கிக்கொள்வதற்காக பல்வேறு ஆய்வுகள் செய்யப்படுகின்றன.

இங்கே குறிப்பிடப்பட்டவை மட்டுமன்றி வேறு பல்வேறு துறைகளிலும் விஞ்ஞான அறிவு செல்வாக்கு செலுத்துகிறது. பௌதிகவியல் சார்ந்த அறிவு, ஆராய்ச்சிகள் மூலமாக புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, மனிதனின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றப்படுகிறது.

விஞ்ஞான முறையின் படிமுறைகள் பற்றி கற்பதற்கு இங்கே அழுத்தவும்.

No comments:

Post a Comment