A/L 2014 MCQ – வினா 06 - விடையும் விளக்கமும்

A/L 2014 MCQ – Question 06

ஒவ்வொன்றும்
மி.இ.வி. E யையும் அகத் தடை r ஐயும் உடையதும் உருவில் காட்டப்பட்டுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளவையுமான இரு கலங்கள் எவற்றைக்கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு சமவலுவானவை
    1. (1)  மி.இ.வி. E யையும் அகத் தடை r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    2. (2)  மி.இ.வி. 2E யையும் அகத் தடை 2r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    3. (3)  மி.இ.வி. 2E யையும் அகத் தடை r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    4. (4)  மி.இ.வி. E யையும் அகத் தடை r/2 ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    5. (5)  மி.இ.வி. E யையும் அகத் தடை 2r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
சரியான விடை: (4)

சமவலுவான தனிக்கலம் என்பது, தரப்பட்ட அமைப்பிலுள்ள மின் மூலகங்களிற்கு பிரதியீடாக, இரு முனைகளுக்கும் இடையிலுள்ள மின்னழுத்த வேறுபாட்டையோ அல்லது தரப்பட்ட சுற்றிலிருந்து எடுக்கப்படும் மின்னோட்டத்தையோ மாற்றாமல், இணைக்கக்கூடிய மின்கலம் ஆகும்.

தரப்பட்ட அமைப்பில் இரு மின்கலங்களினதும் ஒத்த முனைகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. எனவே தரப்பட்ட அமைப்பில் மின்னோட்டம் எதுவும் இருக்காது. இதனால், இரு முனைகளுக்கும் இடையில் உள்ள அழுத்த வேறுபாடானது E இற்கு சமனாக இருக்கும்.

ஆனால், இரு முனைகளுக்கும் இடையில் இவ்விரு கலங்களும் சமாந்தரமாக இணைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் அகத்தடைகள் சமாந்தரத்தடைகள் போல தொழிற்படும். எனவே, இரு முனைகளுக்கும் இடையில் உள்ள விளையுள் தடையானது, r/2 ஆகும்.

எனவே, தரப்பட்ட சுற்றானது மி.இ.வி. E யையும் அகத் தடை r/2 ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு சமவலுவானது.

A/L 2014 MCQ – வினா 05 - விடையும் விளக்கமும்

A/L 2014 MCQ – Question 05

பின்வரும் கூற்றுக்களில் எது கூட்டு நுணுக்குக்காட்டி பற்றி உண்மையானதன்று.
    1. (1)  அது இரு குவிவு வில்லைகளைக் கொண்டது.
    2. (2)  பொருளியினால் உண்டாக்கப்படும் பொருளின் விம்பம் மெய் விம்பமாகும்.
    3. (3)  வில்லைகளின் வேறாக்கம் பொருளியின் அல்லது பார்வைத்துண்டின் குவியத்தூரத்திலும் பார்க்க மிகவும் கூடியதாகும்.
    4. (4)  நுணுக்குக்காட்டியினால் உண்டாக்கப்படும் இறுதி விம்பம் மாய விம்பமாகும்.
    5. (5)  பரிசோதிக்கப்பட வேண்டிய பொருள் பொருளியின் குவியத் தூரத்தினுள்ளே வைக்கப்படுதல் வேண்டும்.
சரியான விடை: (5)
கூட்டுநுணுக்குக்காட்டியின் இயல்பான செப்பஞ்செய்கைக்குரிய கதிர்வரிப் படம்.
கூட்டுநுணுக்குக் காட்டியானது, பொதுவாக சாதாரண மனிதக் கண்ணுக்கு தென்படாத மிகச் சிறிய பொருட்களைப் பார்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது பொருளி, பார்வைத்துண்டு என்னும் இரண்டு இரு குவிவு வில்லைகளைக் கொண்டது. பொருளி வில்லை பார்வைத்துண்டிலும் பார்க்க சிறியதாக இருக்கும். அத்துடன், பொருளியின் குவியத்தூரமானது, பார்வைத்துண்டின் குவியத்தூரத்திலும் சிறியதாக இருக்கும். இரண்டு வில்லைகளினதும் வேறாக்கமானது, இவ்விரண்டு வில்லைகளினதும் குவியத்தூரங்களினதும் கூட்டுத்தொகையிலும் பார்க்க பெரிதாக இருக்கும்.

கூட்டுநுணுக்குக்காட்டியின் பொருளியின் முன்னாள் வைக்கப்படும் பொருளுக்கு, பொருளி தலைகீழான உருப்பெருத்த மெய் விம்பத்தை உருவாக்கும். பொருளியினால் உருவாக்கப்படும் மெய் விம்பமானது, பார்வைத்துண்டின் குவியத்தூரத்தினுள் இருக்குமாறு கருவி அமைக்கப்படும். பார்வைத்துண்டானது, உருப்பெருத்த இறுதி விம்பத்தை, (மாய விம்பத்தை) தோற்றுவிக்கும்.

இறுதிவிம்பமானது, தெளிவுப்பார்வை இழிவுத்தூரத்தில் உருவாக்கப்படும்போது அதிகூடிய உருப்பெருக்கம் உடைய இறுதிவிம்பம் பெறப்படும். இது கூட்டுநுணுக்குக்காட்டியின் இயல்பான செப்பஞ்செய்கை எனப்படும்.

வினாவில் தரப்பட்ட கூற்றுக்களில், "பரிசோதிக்கப்பட வேண்டிய பொருள் பொருளியின் குவியத் தூரத்தினுள்ளே வைக்கப்படுதல் வேண்டும்." என்பது தவறானது. பரிசோதிக்கப்பட வேண்டிய பொருள் பொருளியின் குவியத் தூரத்திற்கு வெளியே வைக்கப்படுதல் வேண்டும். அப்போதுதான் பொருளியினால், உருப்பெருத்த மெய் விம்பத்தை உருவாக்க முடியும்.

A/L 2014 MCQ – வினா 04 - விடையும் விளக்கமும்

A/L 2014 MCQ – Question 04

ஒரு கித்தாரை இசைக்கும் போது அது
    1. (1)  தந்திகளில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
    2. (2)  தந்திகளில் குறுக்கு விருத்தி அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
    3. (3)  தந்திகளில் நெட்டாங்கு நின்ற அலைகளையும் வளியில் குறுக்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
    4. (4)  தந்திகளில் குறுக்கு நின்ற அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
    5. (5)  தந்திகளில் குறுக்கு நின்ற அலைகளையும் வளியில் குறுக்கு நின்ற அலைகளையும் உண்டாக்கும்.
சரியான விடை: (4)

ஒரு கித்தாரை இசைக்கும் போது, அதன் தந்திகள் அருட்டப்படும். இதனால், தந்திகளில் குறுக்கலைகள் உருவாகும். அலைகளின் மேற்பொருந்துகை மூலம், தந்திகளில் நின்ற அலைகள் உருவாகும். நின்ற அலைகளில் சக்தி ஊடுகடத்தப்படுவதில்லை.

தந்திகளில் நின்ற குறுக்கலைகள் காரணமாக, வளியில் நெருக்கல், ஐதாக்கல் ஏற்படுத்தப்படும். இதனால், வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகள் உருவாகும். வளியில் உருவாகும் நெட்டாங்கு விருத்தி அலைகள் காரணமாகவே எமக்கு கித்தாரின் இசையைக் கேட்கக்கூடியதாக இருக்கின்றது.

எனவே, ஒரு கித்தாரை இசைக்கும் போது, அது தந்திகளில் குறுக்கு நின்ற அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.

A/L 2014 MCQ – வினா 03 - விடையும் விளக்கமும்

A/L 2014 MCQ – Question 03

பின்வருவனவற்றில் எது நெட்டாங்கு அலையின் வடிவத்தில் செலுத்தப்படுகின்றது?
    1. (1)  லேசர் ஒளி
    2. (2)  X - கதிர்கள்
    3. (3)  கழியொலி  அலைகள்
    4. (4)  நுணுக்கலைகள் (Microwaves)
    5. (5)  வானொலி அலைகள்
சரியான விடை: (3)

அலைகளை குறுக்கலைகள், நெட்டாங்கு அலைகள் என இரண்டாகப் பிரிக்கலாம். அலை செல்லும் திசைக்கு செங்குத்தாக ஊடக துணிக்கைகள் அதிர்வதன் மூலம் கடத்தப்படும் அலைகள் குறுக்கலைகள் ஆகும். அலை செல்லும் திசையில் ஊடக துணிக்கைகளின் நெருக்கல், ஐதாக்கல் மூலம் செலுத்தப்படும் அலைகள் நெட்டாங்கு அலைகள் ஆகும்.

மின்காந்த அலைகள், குறுக்கலைகள் ஆகும். லேசர் ஒளி, X - கதிர்கள், நுணுக்கலைகள் (Microwaves), வானொலி அலைகள் என்பன வெவ்வேறு மீடிறன்களைக் கொண்டிருந்தாலும், இவை நான்கும் மின்காந்த அலைகளாகும். எனவே, இவை நான்கும் குறுக்கலைகள் ஆகும்.

கழியொலி அலைகள் என்பவை, கேள்தகு வீச்சிலும் பார்க்க உயர்ந்த மீடிறனைக் கொண்ட ஒலி அலைகள் ஆகும். ஒலி அலைகள், நெட்டாங்கு அலைகள். எனவே, கழியொலி அலைகள் நெட்டாங்கு அலைகள் ஆகும்.

A/L 2014 MCQ – வினா 02 - விடையும் விளக்கமும்

A/L 2014 MCQ – Question 02

பின்வரும் கணியங்களில் எது / எவை பரிமாணமில்லாதது / பரிமாணமில்லாதவை?
    1. (A)  தொடர்பு வேகம்
    2. (B)  தொடர்பு அடர்த்தி
    3. (C)  தொடர்பு ஈரப்பதன்

    1. (1)  A மாத்திரம்
    2. (2)  A,B ஆகியன மாத்திரம்
    3. (3)  B,C ஆகியன மாத்திரம்
    4. (4)  A,C ஆகியன மாத்திரம்
    5. (5)  A, B, C ஆகிய எல்லாம்
சரியான விடை: (3)

விகிதங்கள், பின்னங்கள் மற்றும் சதவீதங்கள் பரிமாணம் அற்றவை. அத்துடன் பரிமாணம் அற்ற கணியங்கள் எண்ணிக் கணியங்களாக இருக்கும்.

தொடர்பு வேகம் என்பது, ஒரு பொருள் சார்பாக இன்னொரு பொருளின் வேகம் ஆகும். சாதரணமாக சொல்லப்படும் வேகங்கள், பூமி சார்பானவை. வேகம் ஒரு காவிக்கணியம். வேகத்திற்கு L T-1 என்னும் பரிமாணம் உண்டு.

தொடர்பு அடர்த்தி என்பது, ஒரு திரவத்தின் அடர்த்திக்கும், இன்னொரு திரவத்தின் அடர்த்திக்கும் இடையிலுள்ள விகிதம் ஆகும். பொதுவாக, ஒரு குறித்த திரவத்தின் அடர்த்திக்கும் தூய நீரின் அடர்த்திக்கும் இடையிலான விகிதம், அத்திரவத்தின் சாரடர்த்தி / தொடர்பு அடர்த்தி ஆகும். தொடர்பு அடர்த்திக்கு அலகு, பரிமாணம் இல்லை.

சாரீரப்பதன் அல்லது தொடர்பு ஈரப்பதன் என்பது குறித்த வெப்பநிலையில், குறித்த கனவளவு வளியில் இருக்கும் நீராவியின் திணிவிற்கும், அதே வெப்பநிலையில் அதே குறித்த கனவளவு வளியில் நீரின் நிரம்பலாவி அமுக்கத்திற்கும் இடையிலான விகிதம் ஆகும். தொடர்பு ஈரப்பதனிற்கு அலகு, பரிமாணம் இல்லை.

தரப்பட்ட கணியங்களில், தொடர்பு அடர்த்தி, தொடர்பு ஈரப்பதன் என்பவற்றிற்கு மட்டுமே பரிமாணங்கள் இல்லை.

A/L 2014 MCQ – வினா 01 - விடையும் விளக்கமும்

A/L 2014 MCQ – Question 01

அலகுகளைப் பொறுத்தவரை பின்வரும் கணியங்களில் எது ஏனையவற்றில் இருந்து வேறுபடுகின்றது?
    1. (1)  சுழற்சி இயக்கப்பாட்டுச் சக்தி
    2. (2)  பொறிமுறை அழுத்தச் சக்தி
    3. (3)  அகச் சக்தி
    4. (4)  வேலை
    5. (5)  வலு
சரியான விடை: (5)

சுழற்சி இயக்கப்பாட்டுச் சக்தி என்பது சுழலும் ஒரு பொருளில், அதன் சுழற்சி காரணமாக உருவாகும் சக்தி ஆகும். இது அப்பொருளின் சடத்துவத் திருப்பத்திலும் ( ) அதன் கோணவேகத்திலும் () தங்கியிருக்கும்.


பூச்சிய அழுத்தம் உடைய ஒரு புள்ளியில் இருந்து, பூச்சிய அழுத்தம் இல்லாத இன்னொரு புள்ளிக்கு ஒரு பொருளைக் கொண்டுசெல்லும் போது செய்யப்படும் வேலையானது, அப்பொருளில் பொறிமுறை அழுத்தச் சக்தியாக சேமிக்கப்படும். உதாரணமாக புவி மேற்பரப்பிலிருந்து h உயரத்தில் உள்ள m திணிவுடைய பொருளில் உள்ள, பொறிமுறை அழுத்தச் சக்தியானது mgh ஆல் தரப்படும்.

ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளில் காணப்படும் அகப்பிணைப்புக்கள் மற்றும் மூலக்கூற்றிடைப் பிணைப்புக்கள் காரணமாக அப்பொருளில் சேமிக்கப்பட்டிருக்கும் சக்தி, அகச் சக்தி ஆகும்.

சுழற்சி இயக்கப்பாட்டுச் சக்தி, பொறிமுறை அழுத்தச் சக்தி, அகச் சக்தி என்பன சக்தியின் வெவ்வேறு வடிவங்கள். சக்தியின் அலகு J (ஜூல்) ஆகும்.

வேலை என்பது, ஒரு பொருளை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு அசைப்பதற்கு தேவைப்படும் சக்தி ஆகும். உதாரணமாக ஒரு பொருளில் F விசை தாக்கி, அப்பொருளானது S தூரம் நகருமாயின், அவ்விசையினால் அப்பொருளின் மீது செய்யப்பட்ட வேலையானது F × S ஆல் தரப்படும். வேலையின் அலகு N m அல்லது J (ஜூல்) ஆகும்.

வலு என்பது வேலை செய்யும் வீதம் ஆகும். அதாவது அலகு நேரத்தில் செய்யப்பட்ட வேலையானது வலு எனப்படும். வலுவின் அலகு J s-1 ஆகும்.

எனவே, வினாவில் தரப்பட்ட கணியங்களில், அலகுகளைப் பொறுத்தவரை வேறுபடுவது வலு ஆகும்.

A/L 2014 பௌதிகவியல் MCQ - வினாக்கள் 1 - 10

  1. அலகுகளைப் பொறுத்தவரை பின்வரும் கணியங்களில் எது ஏனையவற்றில் இருந்து வேறுபடுகின்றது?
    1. (1)  சுழற்சி இயக்கப்பாட்டுச் சக்தி
    2. (2)  பொறிமுறை அழுத்தச் சக்தி
    3. (3)  அகச் சக்தி
    4. (4)  வேலை
    5. (5)  வலு
    6. விடையும் விளக்கமும்
  2. பின்வரும் கணியங்களில் எது / எவை பரிமாணமில்லாதது / பரிமாணமில்லாதவை?
    1. (A)  தொடர்பு வேகம்
    2. (B)  தொடர்பு அடர்த்தி
    3. (C)  தொடர்பு ஈரப்பதன்

    1. (1)  A மாத்திரம்
    2. (2)  A,B ஆகியன மாத்திரம்
    3. (3)  B,C ஆகியன மாத்திரம்
    4. (4)  A,C ஆகியன மாத்திரம்
    5. (5)  A, B, C ஆகிய எல்லாம்
    6. விடையும் விளக்கமும்
  3. பின்வருவனவற்றில் எது நெட்டாங்கு அலையின் வடிவத்தில் செலுத்தப்படுகின்றது?
    1. (1)  லேசர் ஒளி
    2. (2)  X - கதிர்கள்
    3. (3)  கழியொலி  அலைகள்
    4. (4)  நுணுக்கலைகள் (Microwaves)
    5. (5)  வானொலி அலைகள்
    6. விடையும் விளக்கமும்
  4. ஒரு கித்தாரை இசைக்கும் போது அது
    1. (1)  தந்திகளில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
    2. (2)  தந்திகளில் குறுக்கு விருத்தி அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
    3. (3)  தந்திகளில் நெட்டாங்கு நின்ற அலைகளையும் வளியில் குறுக்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
    4. (4)  தந்திகளில் குறுக்கு நின்ற அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
    5. (5)  தந்திகளில் குறுக்கு நின்ற அலைகளையும் வளியில் குறுக்கு நின்ற அலைகளையும் உண்டாக்கும்.
    6. விடையும் விளக்கமும்
  5. பின்வரும் கூற்றுக்களில் எது கூட்டு நுணுக்குக்காட்டி பற்றி உண்மையானதன்று.
    1. (1)  அது இரு குவிவு வில்லைகளைக் கொண்டது.
    2. (2)  பொருளியினால் உண்டாக்கப்படும் பொருளின் விம்பம் மெய் விம்பமாகும்.
    3. (3)  வில்லைகளின் வேறாக்கம் பொருளியின் அல்லது பார்வைத்துண்டின் குவியத்தூரத்திலும் பார்க்க மிகவும் கூடியதாகும்.
    4. (4)  நுணுக்குக்காட்டியினால் உண்டாக்கப்படும் இறுதி விம்பம் மாய விம்பமாகும்.
    5. (5)  பரிசோதிக்கப்பட வேண்டிய பொருள் பொருளியின் குவியத் தூரத்தினுள்ளே வைக்கப்படுதல் வேண்டும்.
    6. விடையும் விளக்கமும்
  6. ஒவ்வொன்றும்
    மி.இ.வி. E யையும் அகத் தடை r ஐயும் உடையதும் உருவில் காட்டப்பட்டுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளவையுமான இரு கலங்கள் எவற்றைக்கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு சமவலுவானவை
    1. (1)  மி.இ.வி. E யையும் அகத் தடை r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    2. (2)  மி.இ.வி. 2E யையும் அகத் தடை 2r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    3. (3)  மி.இ.வி. 2E யையும் அகத் தடை r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    4. (4)  மி.இ.வி. E யையும் அகத் தடை r/2 ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    5. (5)  மி.இ.வி. E யையும் அகத் தடை 2r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    6. விடையும் விளக்கமும்
  7. R1 = r, R2 = 2r என்னும் ஆரைகளை உடைய இரு ஏற்றிய (charged) கடத்தும் கோளங்கள் ஒரு மெல்லிய கடத்தும் கம்பியினால் தொடுக்கப்பட்டுள்ளன. தொடுத்த பின்னர் இரு கோளங்களிலும் ஏற்றங்கள் முறையே Q1, Q2 ஆகவும் இரு கோளங்களினதும் ஒத்த பரப்பு ஏற்ற அடர்த்திகள் முறையே ,  ஆகவும் இருப்பின்,
    1. (1)  
    2. (2)  
    3. (3)  
    4. (4)  
    5. (5)  
    6. விடையும் விளக்கமும்
  8. ஒவ்வொன்றும்
    ஏற்றம் + q வை உடைய நான்கு துணிக்கைகள் உருவிற் காட்டப்படுகின்றவாறு ஓர் ஒழுங்கான ஐங்கோணியின் நான்கு உச்சிகளில் வைக்கப்பட்டுள்ளன. ஐங்கோணியின் மையம் O விலிருந்து ஓர் உச்சிக்கு உள்ள தூரம் a ஆகும். ஐங்கோணியின் மையத்தில் உள்ள மின்புலச் செறிவு,
    1. (1)  OE திசையில்  ஆகும்.
    2. (2)  EO திசையில்  ஆகும்.
    3. (3)  OE திசையில்  ஆகும்.
    4. (4)  EO திசையில்  ஆகும்.
    5. (5)  பூச்சியம் ஆகும்.
    6. விடையும் விளக்கமும்
  9. திணிவு ஐயும் ஆரை ஐயும் உடைய ஒரு மெல்லிய வளையம் அதன் மையத்தினூடாக அதன் தளத்திற்குச் செங்குத்தாகச் செல்லும் ஓர் அச்சுப் பற்றி ஒரு மாறாக் கோணவேகம்  உடன் ஒரு கிடைத் தளத்தில் சுழல்கின்றது. இப்போது ஒவ்வொன்றும் திணிவு m ஐ உடைய இரு சிறிய திணிவுகள் வளையத்தின் ஒரு விட்டத்தின் எதிர் முனைகளில் மெதுவாக இணைக்கப்பட்டால், தொகுதியின் புதிய கோண வேகம்,
    1. (1)  
    2. (2)  
    3. (3)  
    4. (4)  
    5. (5)  

  10. திணிவு ஐ உடைய ஒரு துணிக்கை தரையிலிருந்து உயரம்  இல் உள்ள ஓர் இடத்திலிருந்து சுயாதீனமாகப் போடப்படுகின்றது. தரையிலிருந்து அளக்கப்பட்டவாறு உள்ள உயரம் h உடன் துணிக்கையின் இயக்கப்பாட்டுச் சக்தி இன் மாறலை மிகச் சிறந்த விதத்தில் வகைக்குறிப்பது,
    1. (1)  
    2. (2)  
    3. (3)  
    4. (4)  
    5. (5)  

விஞ்ஞான முறையின் படிமுறைகள்

ஒழுங்குமுறையாக வடிவமைக்கப்படாத, ஒரு பரிசோதனையை / ஆய்வை மேற்கொள்ளும் போது, அந்த ஆய்வை மிகச் சிறந்த முறையில் செய்வது சாத்தியமில்லாது போகலாம். இதனால் அந்த ஆய்வின் முடிவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படலாம். ஆய்வை சிறந்த முறையில் செய்வதற்கும் நம்பகமான முடிவை பெறுவதற்கும், ஆய்வுகள் ஒரு சரியான முறைமையின் கீழ் செய்யப்படல் வேண்டும். இதனையே நாம் விஞ்ஞான முறை என்கிறோம்.

விஞ்ஞான முறையின் படிமுறைகள்

  • அவதானம்
  • கருதுகோள்
  • பரிசோதனை
  • கொள்கை அல்லது விதி
  • எதிர்வு கூறல்

அவதானம்

ஆய்விற்கு தேவையான தகவல்களை திரட்டுவதற்காக கவனமாக அவதானிப்புகளை மேற்கொள்ளலே விஞ்ஞான முறையின் முதற் படிமுறை ஆகும். எளிய அவதானங்களின் ஊடாகவோ அல்லது ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வு / ஆய்வுகளின் முடிவுகளில் இருந்தோ தகவல்கள் சேகரிக்கப்படலாம்.

உதாரணம்: 
நீங்கள் எழுதும் போது, உங்கள் பேனாவில் மையின் அளவு குறைகிறது.

கருதுகோள்

அவதானங்களின் ஊடாகவோ, ஆய்வுகளின் முடிவுகளில் இருந்தோ பெறப்பட்ட தகவல்களை பகுப்பாய்வதன் மூலம் கருதுகோள் ஒன்று உருவாக்கப்படும். தர்க்க ரீதியானதும் அனுபவ ரீதியானதுமான விளைவுகளைச் சோதிப்பதற்காக உருவாக்கப்பட்ட எடுகோளானது கருதுகோள் எனப்படும். கருதுகோளை சோதிப்பதன் மூலம் உறுதிப்படுத்தலாம். கருதுகோளை பரிசீலிப்பது பரிசோதனை எனப்படும்.

உதாரணம்: 
"ஒரு பேனாவால் எழுதினால், அந்தப் பேனாவில் மை குறையும்".

இது எமது அவதானத்தினால் உருவாக்கப்பட்ட எடுகோள். இதனை பரிசோதித்து பார்க்க இருப்பதால் இதனை கருதுகோள் எனலாம்.

பரிசோதனை

ஏதாவது ஒரு விடயத்தை சோதிப்பதற்கோ, கண்டுபிடிக்கவோ அல்லது செய்து காட்டுவதற்கோ மேற்கொள்ளப்படும் கட்டுப்பாட்டிலமைந்த செயன்முறையே பரிசோதனை எனப்படும். அதாவது, கருதுகோளை உறுதிப்படுத்தும் பொருட்டு மேற்கொள்ளப்படுவதே பரிசோதனை ஆகும்.

பரிசோதனை முடிவுகள் கருதுகோளின் பொருத்தப்பாட்டிற்கு சரியாக அமையாவிடின் பரிசோதனைச் செயன்முறைகள் சரிபார்க்கப்படல் வேண்டும். பரிசோதனைச் செயன்முறைகள் மாற்றி அமைக்கப்பட்டும் முடிவுகள் முரண்பாடாக அமைந்தால், ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட கருதுகோளானது திருத்தப்படல் வேண்டும். திருத்தப்பட்ட கருதுகோளை சோதிக்க, மீண்டும் ஒரு பரிசோதனை வடிவமைக்கப்படல் வேண்டும்.

உதாரணம்:
ஒரேமாதிரியான இரண்டு புதிய பேனாக்களை வாங்கிக்கொள்ளுங்கள். அவற்றிக்கு A, B என பெயரிட்டு அவற்றில் இருக்கும் மையின் உயரத்தை தனித்தனியே அளந்து குறித்துக்கொள்ளுங்கள். பேனா "B" யை பாவிக்காமல் அப்படியே வைத்துக்கொண்டு, பேனா "A" யை எழுதுவதற்கு பயன்படுத்துங்கள். ஓரளவுக்கு எழுதிய பின்னர், இரண்டு பேனாக்களிலும் தற்போது இருக்கும் மையின் உயரத்தை தனித்தனியே அளந்து, முன்னைய அளவீடுகளுடன் ஒப்பிடவும். 

பெற்ற அளவீடுகளில் இருந்து, பேனா "A" இல் மையின் அளவு குறைந்திருப்பதையும், பேனா "B" இல் மையின் அளவு மாறாதிருப்பதையும் அறிந்துகொள்ளலாம்.

இந்த பரிசோதனை முடிவானது, "ஒரு பேனாவால் எழுதினால், அந்தப் பேனாவில் மை குறையும்." எனும் எமது கருதுகோளை உறுதிப்படுத்துகின்றது.

கொள்கை

பரிசோதனை முடிவுகள் கருதுகோளை உறுதிபடுத்துமாயின் கருதுகோளானது இயற்கையின் குறித்த அம்சம் தொடர்பான புதிய கொள்கையாக மாறுகிறது. அவதானிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவமானது கொள்கை எனப்படும்.

உதாரணம்:
பரிசோதனை முடிவுகள் உறுதிப்படுத்துவதால், "ஒரு பேனாவால் எழுதினால், அந்தப் பேனாவில் மை குறையும்." என்பது ஒரு கொள்கை ஆகும்.

எதிர்வுகூறல்

புதிதாக உருவாக்கப்பட்ட கொள்கையை கவனமாக ஆராய்ந்த பின்னர், இயற்கையின் அறியாததொரு அம்சம் பற்றிய எதிர்வுகூறலை முன்வைக்கலாம்.

உதாரணம்:
"ஒரு பேனாவால் எழுதினால், அந்தப் பேனாவில் மை குறையும்." எனும் கொள்கையை பயன்படுத்தி செய்யப்பட்ட சில எதிர்வுகூறல்கள்:
  1. ஒரு பேனாவினால் எழுதினால் அந்தப் பேனாவில் மட்டுமே மை குறையும். வேறு பேனாவில் மை குறையாது.
  2. ஒரு பேனாவை எழுதுவதற்கு பாவிக்காமல் வைத்திருந்தால், அதில் மையின் அளவு குறையாது.
  3. வேறு இன பேனாவை பயன்படுத்தினால் கூட, அந்த குறிப்பிட்ட பேனாவில் மையின் அளவு குறையும்.
  4. வேறு நிற மையை கொண்ட பேனாவை எழுதுவதற்கு பாவித்தால், அக் குறித்த பேனாவில் மையின் அளவு குறையும்.

குறிப்பு: விஞ்ஞான முறையின் படிமுறைகள், ஒரு ஆய்வை திறம்பட செய்வதற்கு உதவுகின்றன. இருந்தாலும், செய்யப்பட்ட ஆய்வானது முறையாக ஆவணப்படுத்தப்படல் வேண்டும். எமது ஆய்வின் படிமுறைகள், முடிவுகளை எதிர்கால ஆய்வுகளில் பயன்படுத்துவதற்கு முறையான ஆவணப்படுத்தல் அவசியமாகும்.


அலகு 1 இன் ஏனைய பகுதிகளுக்கான குறிப்புகளை படிப்பதற்கு, இங்கே அழுத்தவும்.

பௌதிகவியல் அறிமுகம் - அன்றாட வாழ்க்கையில் பௌதிகவியல்

பௌதிகவியலானது சக்தி, சக்தி தொடர்பாக சடப்பொருட்களின் நடத்தை மற்றும் சக்தி இடமாற்றம் பற்றிய கற்கை ஆகும்.

பௌதிகவியலைக் கொண்டு, எமது அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களை விளக்க முடியும். பௌதிகவியல் ஆனது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டிருந்தது.

எமது பாடப்பரப்பானது 11 அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அலகுகளில் உள்ள உப அலகுகளையும் அவற்றில் அடைக்கப்பட்டுள்ள விடயங்களையும் அறிய இங்கே அழுத்துங்கள்.

வளர்ந்து வரும் பௌதிகவியல் பற்றிய அறிவானது, நவீன உலகின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. நவீன உலகில் விஞ்ஞான அறிவின் பிரயோகங்களுக்கு உதாரணங்களாக பின்வருவனவற்றை கூறலாம்.

போக்குவரத்து:

பண்டைய காலத்தில் நடந்து திரிந்த மனிதன், பின்னர் குதிரை, ஒட்டகம், யானை போன்ற விலங்குளில் சவாரி செய்தான். அதன் பின்னர், போக்குவரத்து சாதனங்களை உருவாக்கிக்கொண்டான். பல்லக்கு, இரதம் தொடக்கம் இன்றைய ராக்கெட் வரை எல்லா போக்குவரத்து சாதனங்களிலும் பௌதிகவியலின் தாக்கம் இருக்கிறது. அதாவது ஒன்று அல்லது பல பௌதீக தத்துவங்களை அடிப்படையாக வைத்தே போக்குவரத்து சாதனங்கள் உருவாக்கப்படுகின்றன.

மிக அண்மைய கண்டுபிடிப்புகளாக சூரிய சக்தியில் இயங்கும் விமானம், சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார்கள், சாரதி இல்லாமல் இயங்கக் கூடிய கார்கள் என்பவற்றை குறிப்பிடலாம். இயற்கை சக்தியை பயன்படுத்தும், சூழலுக்கு அதிகம் மாசுக்களை வெளிவிடாத வாகனங்களை உருவாக்குவதிலேயே தற்போது கூடிய கவனம் செலுத்தப்படுகிறது.


தொலைத்தொடர்பு:

முக்கிய தொலைத்தொடர்பு சாதனமாக கைத்தொலைபேசி பயன்படுவது அனைவரும் அறிந்ததே. இது தவிர, இன்டர்நெட் ஊடான தொலைத்தொடர்பும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. அதி விரைவான இன்டர்நெட் இணைப்புகளை உருவாக்குவதற்கு பல்வேறு நாடுகள் முயல்கின்றன.

ரேடியோ, டிவி போன்றன செய்திகளையும் ஏனைய நிகழ்ச்சிகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகங்களாக நீண்ட காலமாக தொழிற்படுகின்றன. ஆனாலும், தற்போது இன்டர்நெட் இன் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக இன்டர்நெட்டும் செய்திகளையும் ஏனைய நிகழ்ச்சிகள், விடயங்களை மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகமாக தொழிற்படுகிறது. உலகில் எங்கோ ஓர் மூலையில் நிகழும் நிகழ்வுகளை உடனுக்குடன் எம்மால் அறியக்கூடியதாக இருக்கிறது. அயல்வீட்டுக்காரருடனும் பிற நாட்டவருடனும் இன்டர்நெட் மூலமாக எம்மால் தொடர்புகொள்ள முடிகிறது.

மருத்துவத்துறை:

மருத்துவத்துறையில் நோய்களை கண்டுபிடிக்கவும், சில நோய்களை குணப்படுத்தவும் பௌதிகவியல் சார்ந்த அறிவும் கண்டுபிடிப்புகளும் உதவுகின்றன. இரத்தப் பரிசோதனைக்காக ஊசி மூலம் குருதியை எடுக்கும் சிறிய செயன்முறையில் இருந்து, X-Ray scan, MRI scan போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பரிசோதனைகள் வரை பௌதீகவியலின் தாக்கத்தை காணலாம்.

நவீன மருத்துவத்தில் லேசர் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட லேசர் கற்றைகளைக் கொண்டு சத்திரசிகிச்சைகள் செய்யப்படுகின்றன. சத்திரசிகிச்சைக் கத்தியின் பயன்பாடு வெகுவாக குறைந்துவருகிறது. சிறுநீரக கற்களை உடைப்பதற்கும் cancer ஐ கட்டுப்படுத்துவதற்கும் லேசர் பயன்படுகிறது.

குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிக்கு, வேறொரு மருத்துவமனை வைத்தியர், தனது வைத்தியசாலையில் இருந்தவாறே சிகிச்சை அளிக்க (சத்திரசிகிச்சை உட்பட) Tele-Medicine உதவுகிறது.

வலு, சக்தி

அன்றாட வாழ்க்கையில் நாம் பாவிக்கும் பெரும்பாலான உபகரணங்கள், மின் உபகரணங்களாகவே காணப்படுகின்றன. இவற்றிக்கு தேவையான மின் சக்தியை நாம் பல்வேறு வழிகளில் உற்பத்தி செய்கிறோம். வேறு வடிவங்களில் இருக்கும் சக்தி, மின் சக்தியாக மாற்றப்பட்டு வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

நீர்மின்சார உற்பத்தி நிலையம், அனல் மின் நிலையம், காற்றாலைகள், அணு மின் நிலையங்கள் என்பவற்றில் மின் உற்பத்தி நடைபெறுகிறது. விஞ்ஞான அறிவின் வளர்ச்சியின் பயனாக, சூரியப் படலைகள் (Solar) மூலம் சூரிய ஒளியிலிருந்து மின் உருவாக்கப்படுகிறது. சோலார் அமைப்புகளை பிரத்தியேகமாக வீடுகளிலும் பொருத்திக்கொள்ளலாம்.

சில இயந்திரங்கள் பெட்ரோலியப் பொருட்களை எரிப்பதன் மூலம், தமது இயக்கத்திற்கு தேவையான சக்தியைப் பெறுகின்றன. வாகனங்களின் என்ஜின்களை இதற்கு சிறந்த உதாரணமாக குறிப்பிடலாம். இருந்தாலும் சில சக்தி தேவைகளுக்கு மனித வலுவையும் நம்பியிருக்கவேண்டியிருக்கிறது.

புவி மற்றும் அண்டவெளி ஆய்வுகள்

ஆரம்பத்தில், விண்ணில் தெரிந்த நட்சத்திரங்களைக் கொண்டு காலங்களை கணித்த மனிதன், பின்னர் தொலைநோக்கிகளை உருவாக்கி விண்வெளியை நோக்கினான். இதன் விளைவாக பல புதிய நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் அறியப்பட்டன. தற்போது வேறு கிரகங்களில் மனிதன் வாழ முடியுமா எனும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். விண்வெளி ஆய்வுகளுக்காக பல ராக்கெட்கள், செய்மதிகள், பல்வேறு கருவிகள் மற்றும் விஞ்ஞானிகள் பல்வேறு நாடுகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆய்வுகள், தொலைத்தொடர்பு, உளவு மற்றும் ராணுவ தேவைகள் போன்றவற்றிக்காக பல செய்மதிகள் பூமியை வலம்வந்துகொண்டிருக்கின்றன.

காலநிலை மாற்றங்களை அறிந்துகொள்ளவும், இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்து, அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் பண்டைய காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அறிந்துகொள்ளவும் விளங்கிக்கொள்ளவும் பல்வேறு ஆய்வுகள் தினமும் நடைபெறுகின்றன. இவற்றைவிட வியாபார தேவைகளுக்காக, ராணுவ தேவைகளுக்காக, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்காக, சில இயற்கை நிகழ்வுகளை விளங்கிக்கொள்வதற்காக பல்வேறு ஆய்வுகள் செய்யப்படுகின்றன.

இங்கே குறிப்பிடப்பட்டவை மட்டுமன்றி வேறு பல்வேறு துறைகளிலும் விஞ்ஞான அறிவு செல்வாக்கு செலுத்துகிறது. பௌதிகவியல் சார்ந்த அறிவு, ஆராய்ச்சிகள் மூலமாக புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, மனிதனின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றப்படுகிறது.

விஞ்ஞான முறையின் படிமுறைகள் பற்றி கற்பதற்கு இங்கே அழுத்தவும்.